×

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலுக்கு 5 நாள் சிபிஐ காவல்

புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இத்தாலியைச் சோ்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் மற்றொரு அங்கமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் பிரிட்டனில் உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு, முக்கியஸ்தர்கள் பயணிப்பதற்கான 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக அந்நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டதாகவும், ரூ.423 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதனால், கடந்த 2014ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இடைத்தரகர்களாக செயல்பட்டதன் மூலமாக லஞ்சப் பணத்தில் பங்கு பெற்றதாக கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷெல், குய்டோ ஹசாகே, கர்லோ கெரோஸா ஆகிய 3 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டியன் மிஷெல், ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கிறிஸ்டியனுடன் இணைந்து சதியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க அவரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக கூறி அவரை 14 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ஆனால் இறுதியில், மிஷெலை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி அனுமதியளித்தார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையின் நகல்களை அவருக்கு வழங்குமாறும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Augusta Westland ,CBI ,Christian ,Michel , Agusta deal,Christian Michel,CBI,custody,Delhi Court
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...